ECONOMYMEDIA STATEMENTNATIONAL

கோழி விலையை கிலோ வெ.9.50 ஆக குறைக்க உற்பத்தியாளர்கள், வணிகர்கள் இணக்கம்

ஷா ஆலம், செப் 21- அதிகாரிகள் கேட்டுக் கொண்டபடி கோழியின் விலையை கிலோ ஒன்றுக்கு வெ.9.50 ஆக குறைக்க சிலாங்கூரிலுள் 339 கோழி உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்களில் 72.86 விழுக்காட்டினர் அதாவது 247 பேர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அந்த உணவுப் பொருள் விலையை உடனடியாக குறைக்க 86 வணிகர்கள் ஒப்புக் கொண்ட வேளையில் மேலும் அறுவர் நிபந்தனைகளுடன் அவ்வாறு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளதாக பயனீட்டாளர் விவகாரம் மற்றும் ஹலால் உணவுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது ஜவாவி முக்னி கூறினார்.

இம்மாதம் 13 முதல் 19 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உள்நாட்டு வாணிக மற்றும் பயனீட்டாளர்  விவகார அமைச்சின் சிலாங்கூர் மாநில பிரிவுக்கும் வர்த்தகர்களுக்கும் இடையே நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் காணப்பட்டதாக அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் வணிகர்கள் ஒரு கிலோ கோழியை வெ.10.00 முதல் வெ.10.50 வரையிலான விலையில் விற்று வந்தனர்.

பரவலாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் வெ. 8.20 முதல் வெ.9.50 வரையில் ஒரு கிலோ கோழி சில்லறை விலையில் விற்கப்படுவது கண்டறியப்பட்டது. உதாராணத்திற்கு சிப்பாங்கில் உள்ள சில கடைகளில் ஒரு கிலோ கோழி வெ. 8.20 விலையிலும் கோல குபு பாருவில் கிலோ வெ.8.90 விலையிலும் விற்கப்பட்டன.

இங்குள்ள செக்சன் 6 மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் இறைச்சி வகைகளின் விலை சோதனை நடவடிக்கையை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத்  தெரிவித்தார்.


Pengarang :