ECONOMYSELANGOR

கடனைச் செலுத்தும் காலத்தை நீட்டிக்கும் திட்டத்தில் 663 ஹிஜ்ரா தொழில்முனைவோர் பங்கேற்பு

ஷா ஆலம், செப் 22- ஹிஜ்ரா சிலாங்கூர் அறவாரியத்தில் கடன் பெற்று அதனைத் திரும்பச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்கும் 663 வணிகர்கள் கடன் தொகையைச் திரும்பச் செலுத்துவதற்கான தவணை காலத்தை மறுஅட்டவணை செய்துள்ளனர்.

சுமார் 67 லட்சம் வெள்ளி மதிப்பிலான கடன் தொகையை இந்த மறு அட்டவணைத் திட்டம் உள்ளடக்கியுள்ளதாக யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பார்டி முகமது நோர் கூறினார்.

கடன் தொகையைச் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைக்க வகை செய்யும் மோரட்டோரியம் சலுகை கடந்த ஜூலை மாதம் இறுதியுடன் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கோவிட்-19 நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் இந்த கடன் மறுஅட்டவணைத் திட்டம் ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சொன்னார்.

இக்கட்டான சூழலில்  தொழில்முனைவோரை மேலும் சிரமப்படுத்த நாங்கள் விரும்பவில்லை. மாதாந்திர தவணைப் பணத்தை குறைப்பதற்காகவும் கடன் பெற்றவர்கள் மேலும் சிரமத்தை எதிர்நோக்குவதை தவிர்ப்பதற்காவும் கடனைத் திரும்பச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க முடிவு செய்தோம் என்றார் அவர்.

கடனைத் திரும்பச் செலுத்துவதற்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான காலக்கட்டம் தற்போது ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

மீடியா சிலாங்கூர் தொலைக்காட்சி வழி ஒளிபரப்பான ஹிஜ்ரா “தொழில்முனைவோர்- கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து எழுச்சி“ எனும் விவாத நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், ஹிஜ்ரா திட்டத்தில் கடன் பெற்ற 40,000 பேருக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை கடனைத் திரும்பச் செலுத்துவதை ஒத்தி வைப்பதற்கான மோரட்டோரியம் சலுகை வழங்கப்பட்டிருந்தது.


Pengarang :