HEALTHNATIONALSELANGOR

சிலாங்கூரில்  வர்த்தக லைசென்ஸ் பெறுவதை எளிதாக்க நடவடிக்கை

ஷா ஆலம், செப் 22- தற்காலிக வர்த்தக லைசென்ஸ் பெறுவதற்கான விண்ணப்ப முறையை எளிதாக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 

இத்தகைய விண்ணப்பங்களை விரைவாக பரிசீலித்து அங்கீகரிப்பதும் அந்நடவடிக்கைகளில் அடங்கும் என்று ஊராட்சித் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவல் காரணமாக வருமானம் பாதிக்கப்பட்டத் தரப்பினருக்கு உதவுவதற்கு மாநில அரசும் ஊராட்சி மன்றங்களும் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைவதாக  அவர் சொன்னார்.

இந்த தற்காலிக லைசென்ஸ் திட்டம் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் இதுவரை மாநிலத்திலுள்ள அனைத்து ஊராட்சி மன்றங்களின் வாயிலாகவும் 8,300 லைசென்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. வருமானம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் மாநில அரசு கொண்டுள்ள கடப்பாட்டை இது புலப்படுத்துகிறது என்றார் அவர்.

வணிகர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய பொருத்தமான இடங்களை ஊராட்சி மன்றங்கள் தேர்வு செய்யும். வணிகம் செய்வதற்கு ஒதுக்கப்படும் கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய நாங்கள் விரும்புகிறோம் என்றார் அவர்.

இங்குள்ள தாமான் செயலாயாங் முத்தியாரா மற்றும் கம்போங் செலாயாங் இண்டாவில் 17 அங்காடி வியாபாரிகளுக்கு தற்காலிக லைசென்ஸ் வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இதனிடையே, இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகும் இந்த தற்காலிக லைசென்ஸ்களுக்கான காலக் கெடுவை நீட்டிப்பது தொடர்பில் தமது தரப்பு தற்போது விவாதித்து வருவதாக இங் தெரிவித்தார்.

 


Pengarang :