ECONOMYMEDIA STATEMENTNATIONAL

சிலாங்கூரிலுள்ள சி.ஏ.சி. மையங்களுக்கு முன்பதிவின்றி செல்லலாம்- கைரி தகவல்

ஷா ஆலம், செப் 22- கோவிட்-19 நோயாளிகள் வருகைக்கான முன்பதிவின்றி  சிலாங்கூரிலுள்ள கோவிட்-19 மதிப்பீட்டு மையங்களுக்கு (சி.ஏ.சி.) செல்லலாம் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தது மற்றும் அம்மையங்களில் நெரிசல் இன்றி நோயாளிகளை கவனிப்பதற்குரிய வாய்ப்பு ஏற்படுள்ளது ஆகிய காரணங்களின் அடிப்படையில் இந்த தளர்வு அறிவிக்கப்படுவதாக அவர் சொன்னார்.

சிலாங்கூர் போன்ற சில மாநிலங்களில் நேரடியாக சி.ஏ.சி. மையங்களுக்குச் செல்வதற்குரிய கட்டத்திற்கு நாம் மாறிவிட்டோம். இனியும் வருகைக்கான முன்பதிவை பெற வேண்டிய அவசியம் இராது என்றார் அவர்.

மக்களவையில் இன்று சபாக் பெர்ணம் உறுப்பினர் முகமது ஃபாசியா முகமது ஃபாக்கே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். 

நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை கையாள்வதற்கு ஏதுவாக இதர மாநிலங்களில் இயங்கலை வாயிலாக சி.ஏ.சி. மையங்களை உருவாக்கும் முயற்சியில் சுகாதார அமைச்சு ஈடுபட்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

கடந்த ஜூலை மாதம் கோவிட்-19 நோய்த் தொற்று நாட்டில் உச்சத்தில் இருந்த போது ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட கோவிட்-19 நோயாளிகளை கண்காணிப்பதற்காக இயங்கலை வாயிலாக செயல்படும் சி.ஏ.சி. மையங்கள் அமைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :