ECONOMYSELANGOR

பத்தாங் காலி ஆறு பாதுகாக்கப்படுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்

ஷா ஆலம், செப் 25– சிலாங்கூர் மாநிலத்தில் நிகழும் எந்தவொரு நீர் மாசுபாடு சம்பவம் மீதும் மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு நீர் வளங்கள்  பாதுகாக்கப்படுதையும் தொடர்ந்து உறுதி செய்து வருவதாக சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஹீ லோய் சியான் கூறினார்.

பத்தாங் காலி ஆற்றின் நெடுகிலும் செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்ட மையங்கள் தொடர்பிலும் ஆற்றின் சூழியல் முறைக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பிலும் இதுவரை எந்த புகாரும் கிடைக்கப்பெறவில்லை என்று அவர் சொன்னார்.

அந்த ஆற்றின் நீரின் மாதிரி மீது சோதனை மேற்கொள்வது மற்றும் லைசென்ஸ் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிப்பது போன்ற பணிகளை லுவாஸ் எனப்படும் சிலாங்கூர் நீர் நிர்வாக  வாரியம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

உலு சிலாங்கூர் மாவட்ட மன்றத்தின் 2019-2023 ஆண்டு ஊராட்சித் திட்டத்தில் வனப்பகுதி 51.7 விழுக்காடாகவும் விவசாய நிலம் 35.67 விழுக்காடாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

துரித வளர்ச்சி காரணமாக பத்தாங் காலி ஆற்றோரப் பகுதிகளில் விவசாயம், மீன் வளர்ப்பு, சுரங்கத் தொழில், மணல் எடுப்பு, கால்நடை வளர்ப்பு, வீடமைப்பு மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று ஹீ லோய் சியான் குறிப்பிட்டார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுங்கை பத்தாங் காலி மற்றும் சுங்கை தாமு பகுதிகளில் ஏழு ரிசோர்டுகள் மற்றும் குடில் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

இது தவிர, 0.41 ஹெக்டர் பரப்பளவில் மீன் வளர்ப்பு குளம் ஒன்று மாநில மீன்வளத்துறையின் அனுமதியுடன் கடந்த பத்தாண்டுகளாக பத்தாங் காலி ஆற்றோரம் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

ஆற்றோரம் மேற்கொள்ளப்படும மீன் வளர்ப்பு (திளாப்பியா மேரா )  மற்றும் வீடமைப்புத் திட்டங்கள் காரணமாக பத்தாங்க காலி ஆறு விரைவில்  செயலிழந்து போவதற்கான அபாயம் உள்ளதாக பெர்னாமா செய்தி நிறுவனம் கூறியிருந்தது  தொடர்பில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

 


Pengarang :