ANTARABANGSAMEDIA STATEMENTPBTSELANGOR

டுசுன் டுரியான் தோட்ட வீடமைப்புத் திட்ட பிரச்னைக்கு சட்டரீதியாக தீர்வு-சிலாங்கூர் அரசு பரிந்துரை

ஷா ஆலம், அக் 15- கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும்  மோரிப், டுசுன் டுரியான்  தோட்ட முன்னாள் தொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டப் பிரச்னைக்கு சட்ட ரீதியாக தீர்வு காண்பதற்கு சிலாங்கூர் மாநில அரசு பரிந்துரைத்துள்ளது.

அந்த வீடமைப்புத் திட்ட மேம்பாட்டாளரான ஏரா பெர்மாய் சென். பெர்ஹாட் நிறுவனம் மற்றும் 109 வீட்டு உரிமையாளர்களிடம் இந்த பரிந்துரையை தாம் முன்வைத்துள்ளதாக வீடமைப்பு மற்றும் நகர்ப்புற நல்வாழ்வுத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் கூறினார்.

அந்த வீடுகளுக்கான புதிய விலை தொடர்பில் இரு தரப்புக்குமிடையே இணக்கம் காணப்படாததைத் தொடர்ந்து தாம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக அவர் சொன்னார்.

அந்த வீடுகளுக்கு தொடக்கத்தில் நிர்ணயிக்கப்பட்டதைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக விலையை மேம்பாட்டாளர் விதிக்கும் வேளையில் அசல் விலையை விட 15 விழுக்காட்டுத் தொகையை மட்டுமே கூடுதலாகத் தர முடியும் என வீட்டு உரிமையாளர்கள் கூறுகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

சுமார் 3.27 ஹெக்டர் நிலத்தில் வீடுகளை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏரா பெர்மாய் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் பவர் ஆப் அட்டர்னி அதிகாரப் பத்திரத்தில் அத்தோட்டத் தொழிலாளர்கள் கடந்த 2006 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டனர். இதன் வாயிலாக இரு தரப்புக்குமிடையே விற்பனை கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது என்று ரோட்சியா விளக்கினார்.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் அந்த வீடுகளை கட்ட முடியாத நிலை அந்த மேம்பாட்டு நிறுவனத்திற்கு ஏற்பட்டதால் அந்த வீடமைப்புத் திட்டம் கைவிடப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

மாநில அரசுக்கும் ஏரா பெர்மாய் நிறுவனத்திற்கும் இடையே பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று இரு முறை வீடுகளுக்கான விலை மறு ஆய்வு செய்யப்பட்ட போதிலும் அந்த விலையை வீடு வாங்கியோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார் அவர்.


Pengarang :