ECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

பெருந்தொற்று காலத்தில் வாடகை, வர்த்தக லைசென்ஸ் கட்டணக் கழிவு- எம்.பி.எஸ்.ஏ. வழங்கியது

ஷா ஆலம், அக் 15- பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு உதவுவதற்காக வணிக இடங்களுக்கான வாடகை மற்றும் வர்த்தக லைசென்ஸ் கட்டணத்திற்கு கழிவு வழங்குவது உள்ளிட்ட சலுகைகளை ஷா ஆலம் மாநகர் மன்றம் வழங்கியது.

சம்பந்தப்பட்டத் தரப்பினரின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் அமல்படுத்தப்பட்ட இத்திட்டங்கள் 14.5 லட்சம் வெள்ளி நிதிச் செலவினத்தை உள்ளடக்கியிருந்ததாக ஷா ஆலம் டத்தோ பண்டார் டத்தோ ஜமானி அகமது மன்சோர் கூறினார்.

இது தவிர, அதே காலக்கட்டத்தில்  மாநகர் மன்றத்திற்கு சொந்தமான கடைகளில் வணிகம் நடைபெறாத காலத்தில் வாடகை விலக்களிப்பு மற்றும் 50 விழுக்காடு வரையிலான வாடகைக் கழிவை வழங்கியதன் மூலம் 16 லட்சம் வெள்ளி  வருமான பாதிப்பை மாநகர் மன்றம் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இங்குள்ள ஆடிட்டோரியம் டேவான் பண்டாராயா ஷா ஆமில் நடைபெற்ற  தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தை தொடக்கி வைக்கும் நிகழ்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தவிர சிறு அங்காடி வியாபாரிகளுக்கு விதிக்கப்பட்ட பெர்மிட் கட்டணம் 300 வெள்ளியிலிருந்து 90 வெள்ளியாக குறைக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.


Pengarang :