ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வேலை செய்து கொண்டே கல்வி பயில 300 பி40 இளைஞர்களுக்கு வாய்ப்பு

ஷா ஆலம், அக் 16- குறைந்த வருமானம் பெறும் பி40 பிரிவைச் சேர்ந்த 300 இளைஞர்களுக்கு வேலை செய்து கொண்டே கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை சிலாங்கூர் மாநில அரசு வழங்குகிறது.

போர்ட்மென் கல்லுரியில் வர்த்தக நிர்வாகத் துறையில் உயர் கல்வி பெறுவதற்குரிய வாய்ப்பு அம்மாணவர்களுக்கு வழங்கப்படுவதாக தொழிலாளர் திறன் வளர்ப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கூறினார்.

சிலாங்கூர் திறன் வளர்ப்பு பிரிவு (யு.பி.பி.எஸ்.)  ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பங்கேற்பாளர்களுக்கு போர்ட்போய் மார்ட்டில் காசாளர் மற்றும் ஸ்டோர் உதவியாளர் பணி வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்கள் போர்ட்மென் கல்லுரியில் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா பயிற்சியை மேற்கொள்வதற்குரிய வாய்ப்பு வழங்கப்படும். எஸ்.பி.எம். சான்றிதழ் இல்லாதவர்களுக்கு நிபுணத்துவத் துறைகளில் பயிற்சியளிக்கப்படும் என்றார் அவர்.

இப்பங்கேற்பாளர்கள் தினசரி 8 மணி நேர அடிப்படையில் வாரம் ஆறு நாட்கள் வேலை  செய்ய வேண்டும். பிறகு இரண்டு மணி நேரம் இயங்கலை வாயிலாக பாடங்களை படிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

வேலை செய்து கொண்டே படிப்பதன் மூலம் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்குரிய வாய்ப்பினை இளைஞர்கள் பெறும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

இளங்கலை பட்டப்படிப்பு வரை கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்பு இத்திட்ட பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

ஆர்வமுள்ள இளைஞர்கள் யு.பி.பி.எஸ்  முகநூல்  வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :