ECONOMYMEDIA STATEMENTNATIONAL

இளையோருக்கான செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் நவம்பரில் தொடங்கும்

ஷா ஆலம், அக் 18- சிலாங்கூர்  மாநிலத்திலுள்ள 12 முதல் 17 வயது வரையிலான இளையோரை மையமாகக் கொண்ட செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டம் அடுத்த மாதம் தொடங்கும் என்று பொது சுகாதாரத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.

நடமாடும் செல்வேக்ஸ் திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தை அதிகப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் சொன்னார்.

இந்த தடுப்பூசித் திட்டத்திற்கு தனியார் பள்ளிகளிடமிருந்து குறிப்பாக தாபிஷ் பள்ளிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட மாணவர்கள் விரைவாக தடுப்பூசி பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் கூறினார்.

பள்ளியில் பயிலாத இளையோரும் இந்த செல்வேக்ஸ் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். அவர்கள் தாராளமாக இந்த இயக்கத்தில் பங்கேற்று தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம் என்றார் அவர்.

சினோவேக்  தடுப்பூசியை தங்கள் பிள்ளைகளுக்குச் செலுத்த விரும்பும் பெற்றோர்கள் மாநில அரசின் அந்த இலவச தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெற அனுப்பலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிக் ரெமாஜா எனப்படும் இளையோருக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் பைசர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. தங்கள் பிள்ளைகளுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தப்படுவதை விரும்பாத பெறோர்கள் மாநில அரசின் தடுப்பூசித் திட்டத்தில் பங்கேற்கலாம். எனினும், இவ்விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பது பெற்றோர்களைப் பொறுத்ததாகும் என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சின் ஒப்புதலைத் தொடர்ந்து ஒன்றரை லட்சம் தடுப்பூசிகளை உள்ளடக்கிய இளையோருக்கான செல்வேக்ஸ் திட்டம் விரிவாக்கம் காண்பதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த 7 ஆம் தேதி கூறியிருந்தார்.


Pengarang :