ECONOMYMEDIA STATEMENT

எல்லை கடக்கும் குற்றங்கள் தொடர்பில் குற்றப்பதிவுகள் இல்லை- சிலாங்கூர் போலீஸ்

ஷா ஆலம், அக் 18- கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெறாத யாருக்கும் மாநில எல்லை கடந்தது தொடர்பில் சிலாங்கூர் மாநில போலீசார் இதுவரை குற்றப்பதிவை வெளியிடவில்லை.

எனினும், தேசிய பாதுகாப்பு மன்றம் நிர்ணயித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (எஸ்.ஒ.பி.) அனைத்து தரப்பினரும் பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய காவல் துறை தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மாநில போலீஸ் தலைவர் டத்தோ அர்ஜூனைடி முகமது கூறினார்.

மாநில எல்லைகளைக் கடக்க அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால் இனி மாநில எல்லைகளில் சாலைத் தடுப்பு சோதனைகளை மேற்கொள்வது  பொருத்தமான நடவடிக்கையாக இருக்காது.  எனினும், நாங்கள் தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டு வருவோம். அபராதம் செலுத்துவதை தவிர்ப்பதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக பின்பற்றும்படி பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்றார் அவர்.

இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள் மாநில எல்லைகளைக் கடப்பதற்கு அரசாங்கம் கடந்த 10 ஆம் தேதி அனுமதி வழங்கியது.

நாட்டில் தடுப்பூசி பெற்றவர்களின் எண்ணிக்கை 90 விழுக்காட்டை எட்டியதைத் தொடர்ந்து இந்த தளர்வு வழங்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியிருந்தார்.


Pengarang :