ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டினால் சிறை, அபராதம்- போலீஸ் எச்சரிக்கை

ஷா ஆலம், அக் 19- காவல் துறை மற்றும் மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அனுமதியின்றி நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டுவோருக்கு 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது 12 மாதங்கள்  வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட சைக்கிளோட்டிகள் மீது 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் மற்றும் 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புக்கிட் அமான் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ மாட் காசிம் கரீம் கூறினார்.

நெடுஞ்சாலைகளில் சைக்கிளோட்டக் கூடாது என்ற அறிவிப்பு பலகையின் எச்சரிக்கையை மீறுவோருக்கு அதே சட்டத்தின் 79(2) பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 112(3) வது பிரிவின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

சைக்கிள்களின் முன்புற மற்றும் பின்புற விளக்குகளை பொருத்தாதவர்களுக்கு 1959 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து விதிகளின்35வது பிரிவின் படி கூடுதல் பட்சம் 2,000 வெள்ளி அபராதம் அல்லது ஆறு மாதம் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சைக்கிள்களில் பிரேக் மற்றும் மணி இன்றி பயணிப்பவர்கள் மற்றும் வரிசையாக அல்லாமல் கும்பலாக செல்வோருக்கு 42வது விதிகளின் கீழ் அதே தண்டனை விதிக்கப்படும் என்றார் அவர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை சைக்கிளோட்டிகள் சம்பந்தப்பட்ட 150 விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அச்சம்பவங்களில் 71 பேர் உயிரிழந்த வேளையில் 24 பேர் கடுமையான காயங்களுக்கும் 55 பேர் லேசான காயங்களுக்கும் ஆளாகினர் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :