ECONOMYHEADERADMEDIA STATEMENTNATIONAL

சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு  வெ. 1 கோடி அபராதம்- சிறை

ஷா ஆலம், அக் 20- சுற்றுச்சூழலை மாசுபடுத்துவோருக்கு அடுத்தாண்டு தொடங்கி  5,000 வெள்ளி முதல் 1 கோடி வெள்ளி வரையிலான அபராதம் விதிக்கப்படும்.

1974 ஆம்ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் திருத்த மசோதாவில் இந்த அபராதத் தொகை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா அடுத்தாண்டின் முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு எதிராக செயல்படுவோருக்கு குறிப்பாக ஆறுகளை மாசுபடுத்து வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப இச்சட்டத் திருத்தம் கொண்டு வரப்படுவதாக  சுற்றுச் சூழல் மற்றும் நீர் வளத்துறை அமைச்சர் கூறினார்.

இந்த மாசோதா அமைச்சரவையின் அங்கீகாரத்தைப் பெற்றப் பின்னர் அடுத்தாண்டு முதல் காலாண்டில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அவர் சொன்னார்.

மக்களின் சுபிட்சம் மற்றும் சுற்றுச்சூழலின்  பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த சட்டத் திருத்த நடவடிக்கை சீராக நடைபெறும் என எதிர்பார்க்கிறோம் என அமைச்சர் துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

சுற்றுச்சூழல் குற்றங்களுக்கான அபராதத்தை 2,000 வெள்ளியிலிருந்து 50 விழுக்காட்டிற்கும் மேற்போகாத தொகையை அபராதமாக விதிப்பதற்கு முதல் கட்ட சட்டத்திருத்த மசோதா வகை செய்கிறது.

நீரை மாசுபடுத்தும் குற்றங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைத்தண்டனையை வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Pengarang :