ECONOMYSELANGOR

இளையோர் தடுப்பூசித் திட்டத்திற்கு மண்டப வசதி- சுபாங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு

சுபாங் ஜெயா, அக் 21- பிக் எனப்படும் தேசிய கோவிட்-19  தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகளை மத்திய அரசாங்கத்திற்கு ஏற்படுத்தித் தருவதற்கு சுபாங் ஜெயா மாநகர் மன்றம் தயாராக உள்ளது.

இம்மாதம் 14 ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக பூச்சோங் இண்டா, எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபத்தை தாங்கள் வழங்கியுள்ளதாக சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டார் நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

முன்னதாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி இந்த மண்டபத்தை பொதுமக்கள் தடுப்பூசி பெறுதற்கான சிறிய மையமாக பயன்படுத்திக் கொள்வதற்கும் தாங்கள் அனுமதி வழங்கியிருந்ததாக அவர் சொன்னார்.

அதோடு மட்டுமின்றி, கடந்த ஜூன் மாதம் சன்வேயில் செயல்பட்ட தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு உதவி புரிவதற்காக மாநகர் மன்றம் தனது 16 பணியாளர்களை அங்கு அனுப்பியிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு சொன்னார்.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான இளையோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக பூச்சோங் இண்டா தடுப்பூசி மையம் மீண்டும் செயல்படத் தொடங்குவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கடந்த வாரம் கூறியிருந்தார்.

வரும் நவம்பர் 18 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி இயக்கத்தின் போது 25 பள்ளிகளைச் சேர்ந்த 1,500 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Pengarang :