I
ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

தடுப்பூசியை நிராகரிக்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை

லபுவான், அக் 22- வரும் நவம்பர் முதல் தேதிக்குள் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தேசிய பொதுச் சேவைத் துறையின் சுற்றறிக்கையை பின்பற்றும்படி அனைத்து  அரசாங்கம் ஊழியர்களையும் அரசாங்கத் தலைமைச் செயலாளர்  டான்ஸ்ரீ முகமது ஜூக்கி அலி வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தின் இந்த உத்தரவை பின்பற்றாத அரசாங்க ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

தத்தம் துறைத் தலைவர்களின் உத்தரவை  அனைத்து பணியாளர்களும் மதித்து நடக்க வேண்டும் என்பதை அந்த சுற்றறிக்கையும் விதிமுறைகளும் வலியுறுத்துகின்றன என்று அவர் சொன்னார்.

இத்தகைய உத்தரவை மீறும் தரப்பினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

பொதுச் சேவைத் துறை நிர்ணயித்துள்ள தேதிக்குள் தடுப்பூசிகளை முழுமையாகச் செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை பின்பற்றுவதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை நல்கும்படி அனைத்து அரசு ஊழியர்களையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார் அவர்.

இன்று இங்குள்ள மெம்பெடால் சுகாதார மையத்தில் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய மீட்சித் திட்டத்தின் நான்காம் கட்டத்திற்கு அனைத்து மாநிலங்களும் மாறிய பிறகு அரசாங்கம் அலுவலகங்கள் அனைத்தும் வழக்கம் போல் செயல்படத் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :