MEDIA STATEMENTSELANGORSUKANKINI

சிலாங்கூர் தடகளச் சங்கத் தலைவர் பதவியிலிருந்து டத்தோ எஸ்.எம். முத்து நீக்கம்

கோலாலம்பூர், அக் 25- நிதி முறைகேடு தொடர்பான புகார் தொடர்பில் சிலாங்கூர் தடகள விளையாட்டுச் சங்கத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து  டத்தோ எஸ்.எம். முத்து நீக்கப் பட்டுள்ளதோடு அச்சங்கத்தில் உறுப்பினராக இருப்பதற்கும் அவருக்கு ஆயுள்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசிய தடகள விளையாட்டுச் சங்கத்தின் தலைவராகவும் இருக்கும் எஸ்.எம். முத்து மற்றும் அந்த சங்கத்தின் இரு பொறுப்பாளர்களை நீக்குவது தொடர்பான தீர்மானம் நேற்று இங்கு நடைபெற்ற அச்சங்கத்தின் அவசர கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் 39 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

வைப்புத் தொகையாக வைக்கப்பட்டிருந்த சிலாங்கூர் தடகளச் சங்கத்திற்கு சொந்தமான 110,000 வெள்ளி மற்றும் சிலாங்கூர் விளையாட்டு மன்றத்திடமிருந்து பெறப்பட்ட நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக அவசரக் கூட்டத்திற்கு சுயேச்சை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது ஜூஃபார்ஷா இட்ராகிஸ்யா குற்றஞ்சாட்டினார்.

டத்தோ எஸ்.எம். முத்து வகித்து வரும் தலைவர்  பதவியை முடிக்கு  கொண்டு வருவது, அவரின் சங்க உறுப்பினர் தகுதிக்கு ஆயுள்காலத் தடை விதிப்பது ஆகிய தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சங்கத்தின் முன்னாள் பொருளாளர் முகமது பவுசி மனிவண்ணன் அப்துல்லா, முன்னாள் செயலாளர் அப்துல்  ரஹிம் நோர் ஆகியோருக்கு எதிராகவும் இதே மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார் அவர்.

இந்த நிதி மோசடி தொடர்பில் விரைவில் போலீசிலும் விளையாட்டு ஆணையத்திலும் புகார் செய்யப்படும் என்று சங்கத்தின் உதவித் தலைவர் வர்கீஸ் ஆப்ரஹம் கூறினார். 


Pengarang :