MEDIA STATEMENTPBTSELANGOR

கணபதிராவ்- ஜே.பி.எஸ். விவகாரத்திற்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் –மந்திரி புசார்

ஷா ஆலம், அக் 26- சமூக நலத்துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் மற்றும் ஜே.பி.எஸ். எனப்படும் வடிகால் நீர்பாசனத் துறைக்குமிடையே ஏற்பட்ட சர்ச்சைக்கு சுமூகமான முறையில் தீர்வு காணப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தமது தரப்பு அறிவுரை கூறும் என்று அவர் சொன்னார்.

கடுமையாகப் பாடுபட அனைவரும் முயற்சிக்கும் அதேவேளையில் ஒருவரோடு ஒருவர் நல்லிணக்கத்தோடு செயல்பட வேண்டும். வெள்ளப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதுதான் நமது நோக்கமே தவிர ஒருவரை ஒருவர் குறை கூறுவது அல்ல என்று அவர் தெரிவித்தார்.

வெள்ளப் பிரச்னை தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் தொடர்ந்து கேள்வியெழுப்புவதால் இப்பிரச்சனையில் முன்வைக்கப்பட்ட விவகாரம் மீது கவனம் செலுத்தப்படுவது அவசியமாகும். எனினும், அதற்கான  வழிமுறைகள் சரி செய்யப்பட வேண்டும். இதில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு நான் அறிவரை கூறவிருக்கிறேன் என்றார் அவர்.

ஜே.பி.எஸ். பணியாளர்களை பொது இடத்தில் கடிந்து கொண்டதற்காக கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் நேற்று வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

கடந்த சனிக்கிழமையன்று  தாமான் ஸ்ரீமூடாவில் வெள்ள நிலவரத்தைப் பார்வையிட்ட போது ஜே.பி.எஸ். அதிகாரிகள் வழங்கிய பதிலால் அதிருப்தியடைந்து அவர்களை கடிந்து கொள்ளும் காணொளி ஒன்றை கணபதிராவ் தனது  முகநூலில் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து அரசு ஊழியர்களிடமும் குறிப்பாக ஜே.பி.எஸ். பணியாளர்களிடம் கணபதிராவ் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கியுபெக்ஸ் எனப்படும் மலேசிய அரசு ஊழியர்கள் தொழிற்சங்கம் வலியுறுத்தியிருந்தது.


Pengarang :