ECONOMYMEDIA STATEMENTNATIONAL

தீபாவளி தினத்தன்று ஆலயங்களில் வழிபட 50 விழுக்காட்டு பக்தர்களுக்கு அனுமதி

ஷா ஆலம், அக் 26- தீபாவளி தினத்தன்று  ஆலயங்களில் வழிபாடு நடத்த இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்ற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

எனினும், சம்பந்தப்பட்ட வழிபாட்டுத் தலங்களின் பரப்பளவுக்கேற்ப 50 விழுக்காட்டு பக்தர்கள் மட்டுமே இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள முடியும் என்று பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல் குழுவின் இணைத் தலைவர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த நடைமுறையை அமல்படுத்த தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், எனினும், 12 வயதுக்கும் கீழ்ப்பட்ட சிறார்கள் வழிபாட்டில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாது என்றார்.

ஆலயத்தில் 100 பக்தர்கள் வரை கூடுவதற்குரிய வசதி இருந்தால் அங்கு ஐம்பது  பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் ஆலயங்களில் கூடாமலிருப்பதை ஆலய நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

தீபாவளி தொற்று மையம் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய தீபாவளியைக் கொண்டாடும் அனைத்து தரப்பினரும் எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்  வலியுறுத்தினார்.

எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் தங்களை சிரமத்தில் ஆழ்த்துவதாக யாரும் கருதக்கூடாது. இந்த விதிமுறைகள் மற்றவர்களின் நன்மைக்காக அல்லாமல்  நாம் மற்றும் நமது நேசத்திற்குரியவர்களின் பாதுகாப்பு கருதி அமல்படுத்தப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

 


Pengarang :