MEDIA STATEMENTNATIONALPBT

தடுப்பூசி மையம் செல்ல கட்டணக் கழிவுத் திட்டம்- 10,416 பேர் பயன் பெற்றனர்

ஷா ஆலம், அக் 28- கிராப் வாடகைக் கார் மூலம் தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு கட்டணக் கழிவு வழங்கும் சிலாங்கூர் அரசின் திட்டத்தின் வாயிலாக இம்மாதம் 22 ஆம் தேதி வரை 10,416 பேர் பயனடைந்துள்ளனர்.

அக்காலக்கட்டத்தில் இத்திட்டத்திற்கு 14,307 பேர் விண்ணப்பம் செய்திருந்த தாக எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகத்தின் நிறுவன சமூக கடப்பாட்டு பிரிவுத் தலைவர் அகமது அஸ்ரி ஜைனால் நோர் கூறினார்.

அவற்றில் 10,610 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு 101,254 வெள்ளித் தொகை அவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கு பொது மக்களிடமிருந்து  கிடைத்த வரவேற்பு உற்சாகமளிக்கும் வகையில் உள்ளது. வரும் நவம்பர் 30 ஆம் தேதியுடன் இத்திட்டம் முடிவுக்கு வருவதால் இன்னும் தடுப்பூசி பெறாதவர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம் என்று அவர் சொன்னார்.

இளையோருக்கான தடுப்பூசித் திட்டத்தின் கீழ் தங்கள் பிள்ளைகளை தடுப்பூசி மையங்களுக்கு கிராப் கார்கள் மூலம் அழைத்துச் செல்ல விரும்பும் பெற்றோர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்றும் அவர் ஆலோசனை கூறினார்.

கிராப் வாடகைக் கார் மூலம் தடுப்பூசி மையங்களுக்குச் செல்வோருக்கு 20 வெள்ளி கட்டணக் கழிவு வழங்கும் இத்திட்டத்திற்காக சிலாங்கூர் அரசு 10 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆர்வமுள்ளோர் rebatpengangkutangrabvaksin.borangmbiselangor.com  எனும் அகப்பக்கம் வாயிலாக இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.


Pengarang :