ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTPBT

ஸ்ரீ மூடா வட்டாரத்தில் வெள்ளத்தை தடுக்க தற்காலிக நீர் அழுத்த பம்ப் நிலையம்

ஷா ஆலம், நவ 18- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் தற்காலிக நீர் அழுத்த பம்ப் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழி சுற்றுவட்டாரத்தில் ஏற்படும் வெள்ளப் பிரச்னைக்கு தீர் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராசாவ் ஆற்றில் நீர் மட்டம் உயரும் போது நீரை தானியங்கி முறையில் உறிஞ்சி வெளியேற்றக்கூடிய இரு நீர் அழுத்த பம்ப் செட்டுகள் அங்கு பொருத்தப்பட்டுள்ளதாக  அடிப்படை வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஞ்சினியர் இஷாம் ஹஷிம் கூறினார்.

அந்த நீர் அழுத்த பம்ப்கள் ஒவ்வொன்றும் விநாடிக்கு 200 லிட்டரை நீரை வெளியேற்றும் சக்தி கொண்டவை என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பகுதி ராசாவ் ஆற்று நீர் கிள்ளான் ஆற்றில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது போக குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் நீர் இந்த ஆற்றில் சேர்க்கிறது. கன மழையின் போது நீர் மட்டம் உயர்வதை கருத்தில் கொண்டு இங்கு அமைக்கப்பட்டுள்ள மதகை மூட வேண்டியுள்ளது என்றார் அவர்.

மதகு மூடப்பட்ட சமயத்தில் குடியிருப்பு பகுதிகளிலிருந்து வெளியேறும் நீரை உறிஞ்சி ஆற்றில் வெளியேற்றக் கூடிய பணியை இந்த நீர் அழுத்த பம்ப்கள் மேற்கொள்ளும். இவ்வாறு செய்யாவிட்டால் நீர் பெருக்கெடுத்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து விடும் என்று அவர் சொன்னார்.

குப்பைக் கூளங்களால் பாதிப்பு ஏற்படாமலிருப்பதை உறுதி செய்ய இந்த சாதனைத்தை முறையாக பராமரித்து வருவது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

சுமார் 770,000 வெள்ளி செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் அழுத்த பம்ப் நிலையத்தை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சமூக மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான வீ.கணபதிராவும் உடனிருந்தார்.

நீர் சேகரிப்பு குளங்களை விரிவுபடுத்துவது மற்றும் நிரந்தர நீர் அழுத்த பம்ப் நிலையம் அமைப்பது ஆகிய பணிகள் 2023 ஆம் ஆண்டில் முற்றுப் பெற்றப் பின்னர் புக்கிட் கெமுனிங், புக்கிட் நாகா, தாமான் ஸ்ரீ மூடா, புக்கிட் ரீமாவ் ஆகிய பகுதிகளில் வெள்ளப் பிரச்சனைக்கு முற்றாகத் தீர்வு காணப்படும் என்று இஷாம் ஹஷிம் தெரிவித்தார்.

ஒரு கோடி வெள்ளி மதிப்பிலான இத்திட்டம் தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே முற்றுப் பெற்றிருக்க வேண்டிய இத்திட்டம் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக தாமதமடைந்தது என்றார் அவர்.


Pengarang :