ECONOMYMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூர் மாநில பட்ஜெட்டில்,  இந்தியர்களுக்கு 1.2 கோடி  வெள்ளி ஒதுக்கீடு- கணபதிராவ் தகவல்

ஷா ஆலம், நவ 27- சிலாங்கூர் மாநில அரசின் 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்காக ஒரு கோடியே 20 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ் கூறினார்.

இந்த நிதி ஒதுக்கீட்டில் 50 லட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கும் 18 லட்சம் வெள்ளி இந்து ஆலயங்களுக்கும் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதுதவிர, இந்திய கலை, கலாசார நிகழ்வுகள், சிறு பயிற்சி திட்டங்களுக்கு 5 லட்சம் வெள்ளியும் யு.பி.எஸ்.ஆர். மாணவர்களுக்கு வெகுமதி, பேருந்து கட்டணம், உயர்கல்வி மாணவர்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட இந்திய மாணவர் மேம்பாட்டுத்  திட்டங்களுக்கு 20 லட்சம் வெள்ளியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

மேலும் ஐ-சீட் எனப்படும் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகாவுக்கு 11 லட்சத்து 46 ஆயிரம் வெள்ளியும் வழங்கப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இவை யாவும் இந்தியர்களுக்கான பிரத்தியேக திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியாகும். இந்த நிதி ஒதுக்கீட்டின் மதிப்பு சுமார் 99 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளது.

இந்த பிரத்தியேக நிதி ஒதுக்கீடு தவிர்த்து  தீபாவளியை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் பற்றுச் சீட்டு வழங்கும் திட்டத்திற்கு மேலும் 20 லட்சம் வெள்ளி வழங்கப்படுகிறது. 

இதன் வழி 2022 வரவு செலவுத் திட்டத்தில் இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு 1 கோடியே 20 லட்சம் வெள்ளியை எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :