ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மின்சார வாகனங்களை சார்ஜ் செய்யும் இடங்களை அடையாளம் காண எம்.பி.எஸ்.ஏ மற்றும் எம்.பி.ஏ.ஜே. முயற்சி

ஷா ஆலம், டிச 1- மின்சார வாகனங்களை (இ.வி.) சார்ஜ் செய்யும் இடங்களை அடையாளம் காணும் நடவடிக்கையில் இரு ஊராட்சி மன்றங்கள் ஈடுபட்டு வருகின்றன.

ஷா ஆலம் மாநகர் மன்றம் மற்றும் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம் ஆகிய அவ்விரு ஊராட்சி மன்றங்களும் தனியார் துறையினருடன் சேர்ந்து பொருத்தமான இடங்களைத் தேடி வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இத்திட்டம் தொடர்பில் சில பரிந்துரைகளை நாங்கள் பெற்றுள்ளோம். மலேசியாவில் மின்சார வாகன நிலையங்களுக்கான முன்னோடி மாநிலமாக சிலாங்கூர் விளங்குவதற்கு ஏதுவாக மேலும் அதிகமான பரிந்துரைகளை சம்பந்தப்பட்டத் தரப்பினரிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் முன்னோக்கிச் செல்வதற்கும் கார்பன் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கும் ஏதுவாக இத்திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போது மின்சார வாகனங்கள் வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக உள்ளன. கார்கள் மட்டுமின்றி வேன். பஸ், லோரி உள்ளிட்ட வாகனங்களும் மின்சார முறையில் இயங்குகின்றன என்றார் அவர்.

மாநிலம் முழுவதும் மின்சாரக் கார்களை சார்ஜ் செய்யும் நிலையங்களை அமைப்பதற்காக சிலாங்கூர் அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை அடுத்தாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்த போது மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.

 


Pengarang :