ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

ஒமிக்ரோன் அச்சுறுத்தலால்- எண்டமிக் கட்டத்திற்கு மாறும்  திட்டம் ஒத்தி வைப்பு

கோலாலம்பூர், டிச 1- டெல்டா நோய்த் தொற்றைவிட அதிவிரைவாகப் பரவக்கூடிய ஒமிக்ரோன் எனப்படும் உருமாற்றம் கண்ட புதிய வகை கோவிட்-19 நோய்த் தொற்று குறித்து மேலும் விரிவாக அறிந்து கொள்வதற்கு ஏதுவாக எண்டமிக் கட்டத்திற்கு மாறும் திட்டத்தை அரசாங்கம் ஒத்தி வைக்க முடிவு செய்துள்ளது.

அந்த புதிய வகை நோய்த் தொற்று ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதி நாடுகளில் மட்டுமின்றி டென்மார்க், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கும் பரவியுள்ளதாக தற்காப்புத் துறை மூத்த அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் ஹூசேன் கூறினார்.

நமது நாட்டில் இதுவரை இந்த புதிய வகை நோய்த் தொற்று தொடர்பில் எந்த சம்பவமும் பதிவு செய்யப்படாத போதிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப் படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

அண்மையில் எஸ்.ஒ.பி, எனப்படும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளில் தளர்வுகளை அறிவித்திருந்தோம். இது தவிர, எண்டமிக் கட்டத்தில் ஏழு அடிப்படை அம்சங்கள் தொடர்பான அறிவிப்பை வெகு விரைவில் வெளியிட முடிவு செய்திருந்தோம். எனினும், நடப்புச் சூழலில் ஒமிக்ரோன் நோய்த் தொற்றை அணுக்கமாக கண்காணிக்கவும் கட்டுப்படுத்துவும் தவறிவிட்டால் நாம் தீட்டிய திட்டங்கள் யாவும் பாதிப்புக்குள்ளகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

மலேசியா எண்டமிக் கட்டத்தில் நுழைவதன் மூலம் கோவிட்-19 நோய்த் தொற்றுடன் மலேசியர்கள் வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதற்கு ஏதுவாக ஏழு முதன்மை அளவீடுகளை அரசாங்கம் முன்னதாக நிர்ணயித்திருந்தது.


Pengarang :