ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTPBTSELANGOR

ஸ்ரீ மூடாவில் வரும் சனிக்கிழமை பெரிய அளவில் துப்புரவு இயக்கம்

ஷா ஆலம், ஜன 5- இங்குள்ள செக்சன் 25, தாமான் ஸ்ரீ மூடாவில் வரும் சனிக்கிழமையன்று பெரிய அளவில் துப்புரவுப் பணிகளை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மேண்ட் நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 10,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் அப்பகுதியில் மீண்டும் புதுப் பொலிவை ஏற்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுவதாக அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரம்லி முகமது தாஹிர் கூறினார்.

இந்த ஒரு நாள் துப்புரவு இயக்கம் ஊராட்சி மற்றும் வீடமைப்பு துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஊராட்சி மன்றங்கள், தன்னார்வலர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த இயக்கத்தின் போது கால்வாய்களைச் சுத்தம் செய்வது மற்றும் எஞ்சியிருக்கும் குப்பைகளை அகற்றுவது போன்ற பணிகளில் கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

இவ்விவகாரம் தொடர்பில் நேற்று நாங்கள் வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சில் சந்திப்பு நடத்தினோம். அங்கு குவிந்துள்ள வெள்ளத்திற்கு பிந்தைய குப்பைகளை அகற்றும் மாபெரும் இயக்கத்தை வரும் சனிக்கிழமை நடத்தவிருக்கிறோம் என்று அவர் மேலும் சொன்னார்.

வெள்ளத்தினால் அதிக குப்பைகள் சேர்ந்த இடமாகவும் துப்புரவுப் பணிகள் ஆகக் கடைசியாக முடிவுக்கு வரும் இடமாகவும் ஸ்ரீ மூடா விளங்குவதால் இப்பகுதியை முழுமையாக சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தாமான்  ஸ்ரீ  மூடாவில் இதுவரை 90 விழுக்காட்டு குப்பைகள் அகற்றப்பட்டுள்ள வேளையில் எஞ்சிய குப்பைகளை அகற்றும் பணி வரும் சனிக்கிழமை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக ரம்லி தெரிவித்தார்.


Pengarang :