ANTARABANGSAECONOMYMEDIA STATEMENTNATIONALPBT

நியாகா டாருள் ஏசான் திட்டத்தின் வழி 1,476 மகளிருக்கு வர்த்தக வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 11- சிலாங்கூர் நியாகா டாருள் ஏசான் (நாடி) எனும் திட்டத்தின் வழி இம்மாத தொடக்கம் வரை 1,476 மகளிர் தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.

கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் இதுவரை இத்திட்டத்திற்காக 60 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி செலவிடப்பட்டுள்ள வேளையில் ஒவ்வொரு தொழில்முனைவோரும் 1,000 வெள்ளி முதல் 5,000 வெள்ளி வரை பெற்றுள்ளனர்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சிலாங்கூர் மக்களுக்கு உதவுவதற்காக மாநில அரசு 1 கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் எனப்படும் வர்த்தக கடனுதவி அமைப்பு கூறியது.

குறைவான முதலீட்டில் சிறு அளவிலான வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவோருக்கு உதவுவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளதாக அந்த அறவாரியம் பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

இந்த திட்டத்திற்கு அனைத்து இனங்களையும் சேர்ந்த மகளிர் விண்ணப்பிக்கலாம் www.hijrahselangor.com எனும் அகப்பக்கம் வாயிலாக அல்லது மாநிலம் முழுவதும் உள்ள 20 ஹிஜ்ரா கிளைகள் மூலம் இந்த கடனுதவித் திட்டத்திற்கு  விண்ணப்பம் செய்யலாம்.


Pengarang :