ANTARABANGSAMEDIA STATEMENTNATIONALPBT

கோவிட்-19 : பத்துமலை தைப்பூசத்தில் கண்காணிப்பு பணியில் 1,000 தன்னார்வலர்கள்

கோலாலம்பூர், ஜன 14- இம்மாதம் 18 ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தைப்பூச விழாவின் போது கோவிட்-19 எஸ்.ஒ.பி. விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய பத்து கேவ்ஸ், ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தான நிர்வாகம் 1,000 தன்னார்வலர்களை பணியில் அமர்த்தவுள்ளது.

இந்த தன்னார்வலர் குழுவில் இணைவதற்கு இதுவரை 500 பொதுமக்கள் பதிவு செய்துள்ள வேளையில் எஞ்சியோர் ஆலய நிர்வாகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தேவஸ்தானச் செயலாளர் சி.சேதுபதி கூறினார்.

 இடைவெளியைக் கடைபிடிப்பது, கியு.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வது உள்ளிட்ட  நிலையான செயலாக்க விதிமுறைகளை பக்தர்கள் கடைபிடிப்பதை இந்த தன்னார்வலர்கள் உறுதி செய்வர் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவிட்-19 நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஏதுவாக பக்தர்கள்  எஸ்.ஒ.பி. விதிகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கான உச்சபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

தற்போது நாங்கள் பால்குடம் எடுப்பவர்களை இணையம் வாயிலாக பதிவு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். பதிவு செய்தவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும் என்பதோடு நிர்ணயிக்கப்பட்ட எஸ்.ஒ.பி. விதிகளுக்கு உட்பட்டு தைப்பூச விழா சிறப்பாக நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் என்றார் அவர்.

இந்த தைப்பூச விழா வரும் 16 தேதி தொடங்குவதாக கூறிய சேதுபதி, வெள்ளி இரதம் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் ஜாலான் துன் எச்.எஸ். லீ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து இரவு மணி 10.00க்கு புறப்பட்டு மறு நாள் காலை 10.00 மணிக்கு பத்து கேவ்ஸ் திருத்தலம் வந்தடையும் என்றார்.

வரும் 19 ஆம் தேதி மாலை 4.00 மணியளவில் வெள்ளி இரதம் பத்து கேவ்ஸ் திருத்தலத்திலிருந்து புறப்பட்டு அன்றிவு மீண்டும் தலைநகர் ஜாலான் துன். எச்.எஸ். லீயில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் வந்தடையும். இந்த இரத ஊர்வலத்தில் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த 70 பேர் மட்டுமே பங்கு கொள்வர். பக்தர்கள் இரத ஊர்வலத்துடன் வருவதற்கு அனுமதி கிடையாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.


Pengarang :