ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

தைப்பூச எஸ்.ஒ.பி.- பக்தர்களின் ஒத்துழைப்பு குறித்து அமைச்சர் மனநிறைவு

கோலாலாம்பூர், ஜன 19- இவ்வாண்டு தைப்பூச விழாவின் போது நிலையான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) கடைபிடிப்பதில் பக்தர்கள் காட்டிய ஒத்துழைப்பு குறித்து தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் டத்தோ ஹலிமா முகமது சடிக் மனநிறைவு தெரிவித்தார்.

தைப்பூச விழாவின் போது நிலைமையை கட்டுக்குள் வைத்திருந்த அனைத்து ஆலயங்களுக்கும் குறிப்பாக பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்,நடராஜா மற்றும் தன்னார்வர்களுக்கு  அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளின் அமலாக்கம் ஒருபுறமிருக்க, தைப்பூசத்தின் போது தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்த வந்த பக்தர்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதிலும் ஆலய நிர்வாக அக்கறை காட்டியது வரவேற்கத்தக்க ஒன்று என அவர் குறிப்பிட்டார்.

பத்துமலைத் திருத்தலத்தில் தைப்பூச விழாவின் போது எஸ்.ஒ.பி. விதிமுறை அமலாக்கத்தை ஆய்வு செய்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடனை முறையாக செலுத்துவதை உறுதி செய்வதில் உரிய பங்கினை ஆற்றிய அரச மலேசிய போலீஸ் படைக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, இவ்வட்டார இந்துக்களின் பயனுக்காக பத்துமலை ஸ்ரீ சுப்பிரமணியர் கோவில்  வளாகத்தில் இவ்வாண்டு மண்டபம் ஒன்று நிர்மாணிக்கப்படவுள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.


Pengarang :