வெள்ள நிவாரண நிதி பகிர்ந்தளிப்பு முறையை மத்திய அரசு எளிதாக்க வேண்டும்- மேரு உறுப்பினர் கோரிக்கை

கிள்ளான், ஜன 19- வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான பந்துவான் வாங் ஏசான் எனும் நிதியுதவித் திட்ட நிதியளிப்பு முறையை மத்திய அரசு எளிதாக்க வேண்டும் என மேரு சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.

மேரு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிலாங்கூர் பங்கிட் உதவித் திட்டத்துடன் சேர்த்து மத்திய அரசின் நிதியுதவி வழங்கப்படவில்லை என்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது பக்ருள்ராஸி முகமது மொக்தார் கூறினார்.

வழக்கமாக மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக 2,000 வெள்ளியை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பெற்று வந்தனர். எனினும், இம்முறை சிலாங்கூர் அரசின் உதவி நிதி மட்டுமே வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைப்பதற்கும் ஏதுவாக நிவாரண நிதியை மத்திய அரசு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக் கணக்கில் சேர்த்து விடும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேரு தொகுதியில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 900 பேருக்கு மாநில அரசின் வெள்ள நிவாரண நிதி வழங்கும் நிகழ்வை பார்வையிட்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 1,000 வெள்ளியும் இந்த பேரிடரில் உயிரழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10,000 வெள்ளியும் பந்துவான் சிலாங்கூர் பங்கிட் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த மாதம் 21 ஆம் தேதி அறிவித்திருந்தார்.


Pengarang :