ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTPENDIDIKAN

மலேசியா-சிங்கப்பூர் இடையே வி.டி.எல். டிக்கெட் விற்பனை முறை இன்று முதல் அமல்

கோலாலம்பூர், ஜன 21- மலேசியா சிங்கப்பூர் இடையே கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தற்காலிகமாக  நிறுத்தப்பட்ட தரை மற்றும் வான் வழி தடுப்பூசி பாதை (வி.டி.எல்.) திட்டத்திற்கான பஸ் மற்றும் விமான டிக்கெட் விற்பனை இன்று முதல் திறக்கப்படுகிறது.

எனினும், தரை மற்றும் ஆகாய மார்க்கத்திற்கான நடப்பு பயணிகள் எண்ணிக்கையிலிருந்து 50 விழுக்காடாக பஸ் மற்றும் விமான கோட்டா நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் கூறினார்.

இருந்த போதிலும், கடந்த ஜனவரி 20 ஆம் தேதிக்குப் பிறகு அதாவது டிக்கெட் விற்பனை நிறுத்தி வைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் டிக்கெட் வாங்கியவர்கள் வி.டி.எல். முறையைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இரு நாடுகளின் நடப்பு கோவிட்-19 நோய்த் தொற்று இடர் மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த வி.டி.எல். பயணத் திட்டத்தை தொடர்வதற்கு முடிவெடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஒமிக்ரோன் வகை தொற்று பரவலைத் தொடர்ந்து இம்மாதம் 20 ஆம் தேதி வரை தரை மற்றும் ஆகாய மார்க்க வி.டி.எல். டிக்கெட் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைக்க  மலேசியாவும் சிங்கப்பூரும் கடந்த மாதம் 23 ஆம் தேதி முடிவெடுத்தன.


Pengarang :