ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONAL

எதிர்காலத்தில் வெள்ளப் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பீர்- அரசுக்கு பக்கத்தான் கோரிக்கை

ஷா ஆலம், ஜன 21- எதிர்காலத்தில் பெரிய அளவிலான வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்வதற்கு தேவையான தளவாடங்களுடன் முழு தயார் நிலையில் இருக்கும்படி அரசாங்கத்தை பக்கத்தான் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பருவ நிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களிலும் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று நேற்று நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தில் உரையாற்றிய போது அவர்கள் குறிப்பிட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பில் அவையில் பேசிய ஹாங் துவா ஜெயா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சம்சுல் இஸ்கந்தார் முகமது அக்கின், பெரிய அளவிலான பேரிடர் ஏற்படும் போது அதனை சமாளிப்பதற்கு போதுமான தளவாடங்கள் தங்கள் வசம் உள்ளதா என்பதை அரசாங்கம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அண்மையில் வெள்ள மேலாண்மையை நேரில் கண்டப் பின்னர், அரசிடம் உள்ள வெள்ள நிவாரணத்திற்கான தளவாடங்கள் குறித்து கேள்வியெழுப்ப விரும்புகிறேன். போதுமான தளவாடங்கள் உள்ளதா என்பதை அரசாங்கம் தெளிவாக அறிவிக்க வேண்டும். அவற்றை பட்டியலிடவும் வேண்டும். தேவை ஏற்படும் பட்சத்தில் நாட்டின் பாதுகாப்பு கருதி கூடுதல் தளவாடங்களை வாங்குவற்கு தேவையான நிதியை நிதியமைச்சு ஒதுக்க வேண்டும் என்றார் அவர்.

இதனிடையே, நாட்டின் பொருளாதார மையமாக விளங்கும் கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் வெள்ள சீரமைப்பு பணிக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று கோத்தா ராஜா உறுப்பினர் முகமது சாபு கேட்டுக் கொண்டார்.

பேரிடரை குறிப்பாக வெள்ள மேலாண்மையை சீராக மேற்கொள்வதற்கு ஏதுவாக நட்மா எனப்படும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தை மாநில அரசாங்கங்களின் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் வலியுறுத்தினார்.

 


Pengarang :