ECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளை அதிகரிக்கத் திட்டம்- அடுத்த கூட்டத்தில் தீர்மானம் தாக்கல்

ஷா ஆலம், மார்ச் 22- சிலாங்கூரில் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான தீர்மானத்தை மாநில அரசு அடுத்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவுள்ளது.

மாநிலத்தில் அனைவருக்கும் சமஅளவிலான சேவை கிடைப்பதற்கு ஏதுவாக நகர் மற்றும் புறநகர் தொகுதிகளுக்கிடையே வாக்காளர்கள் எண்ணிக்கை சமநிலையாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பான பரிந்துரை குறித்து விவாதிப்பதற்காக வரும் மார்ச் 30 ஆம் தேதியன்று தேர்தல் ஆணையத்துடன் விளக்கமளிப்பு நிகழ்வு நடத்தப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த விளக்கமளிப்பில் நமக்கு மேலும் விரிவான தகவல்கள் கிடைக்கும் என்பதோடு மாநில அரசு மற்றும் தேர்தல் ஆணையம் ஆகிய இரு தரப்பின் பரிந்துரைகளை ஆராய்வதற்கும் வாய்ப்பு கிட்டும் என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் இறுதி செய்யப்பட்டவுடன் இதனை மாநில சட்டமன்றத்திற்கு கொண்டுச் செல்வோம். சட்டமன்றத்தில் நமக்கு மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. சட்டமன்றத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டப் பின்னர் இது நாடாளுமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படும் என்றார் அவர்.

வாக்காளர்கள் எண்ணிக்கை 75,000 த்திற்கும் அதிகமாக உள்ள தொகுதிகள் மாற்றத்திற்குள்ளாகும் எனக் கூறிய அவர், எனினும், தேர்தல் ஆணையத்தின் முடிவைப் பொறுத்தே இதன் அமலாக்கம் அமையும் என்றார்.

தற்போதைக்கு 75,000 த்திற்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளத் தொகுதிகள் மீது கவனம் செலுத்தப்படுகிறது. அத்தொகுதிகளை இரண்டு அல்லது மூன்றாம் ஒன்றிணைப்போம். சில தொகுதிகள் குறிப்பாக கின்ராரா தொகுதி ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களைக் கொண்டுள்ளது என்று அவர் சொன்னார்.

தொகுதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பது எளிதான காரியமல்ல என்பதால் இதன் தொடர்பில் நமக்கு புரிந்துணர்வு தேவைப்படுகிறது. சட்டமன்ற  உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய சம்பளம், அலவன்ஸ் மற்றும் ஓய்வூதியம் ஆகியவைற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.


Pengarang :