NATIONALPENDIDIKANSELANGOR

வெ. 235,000 செலவில் மீண்டும் பள்ளிக்குத் செல்வோம் இயக்கம்- பெக்காவானிஸ் அமைப்பு ஏற்பாடு

கோம்பாக், மார்ச் 30– சிலாங்கூரில் 49 சட்டமன்றத் தொகுதிகளில் மீண்டும் பள்ளிக்குச் செல்வோம் இயக்கத்தை மேற்கொள்வதற்காக சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பான பெக்காவானிஸ் 235,000 வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒவ்வொரு தொகுதியிலும் வசதி குறைந்த பி40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு தலா 100 வெள்ளி பகிர்ந்தளிக்கப்படும் என்று அந்த அமைப்பின் தலைவர் டத்தின்ஸ்ரீ மஸ்டியானா முகமது கூறினார்.

தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் எதிர்நோக்கும்  சுமையை குறைப்பதில் இந்த நிதியுதவி ஓரளவு துணை புரியும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இன்று சுங்கை துவா தொகுதி சேவை மையத்தில் 50 மாணவர்களுக்கு உதவித் தொகையை ஒப்படைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த உதவித் திட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக க் கூறிய அவர், இதன் பின்னர் மற்ற தொகுதிகளில் நிதியுதவி வழங்கும் பணி தொடரும் என்றார்.

பள்ளி மாணவர்களுக்கான உதவித் திட்டம் தவிர்த்து, அண்மையில் கொண்டாடப்பட்ட சீனப்புத்தாண்டின் போது தனித்து வாழும் தாய்மார்கள், மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினருக்கும் பெக்காவானிஸ் உதவி வழங்கியது. மாநிலத்தில் 49 தொகுதிகளில் இத்திட்டத்தை மேற்கொள்ள அந்த அமைப்பு 196,000 வெள்ளியைச் செலவிட்டது.

சிலாங்கூரில் கடந்தாண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு 107,500 வெள்ளி செலவில் அடிப்படை உணவுப் பொருள்கள், உடைகள், சிறார்களுக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்களை இந்த அமைப்பு வழங்கியது.


Pengarang :