ACTIVITIES AND ADSALAM SEKITAR & CUACAECONOMY

பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கும் இயக்கம்-  பெ.ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 6- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை சேகரிக்கும் இயக்கத்தை பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

தாமான் மேடான் பிஜேஎஸ் 2, கிளானா ஜெயா எஸ்.எஸ். 6, செக்சன் 4 கோத்தா டாமன்சாரா, பிஜேயு 10 ஆகிய நான்கு ரமலான் சந்தைகள் உள்பட ஏழு இடங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணைய் சேகரிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டத்தோ பண்டார் முகமது அஸான் முகமது அமீர் கூறினார்.

ரமலான் சந்தைகளில் உள்ள நான்கு எண்ணெய் சேகரிப்பு மையங்களும் மாலை 4.00 மணி முதல் 6.30 மணி வரை செயல்படும் என அவர் தெரிவித்தார்.

பி.ஜே. ஈக்கோ ரீசைக்கிளிங் பிளாசா (செவ்வாய் முதல் வெள்ளி வரை), தாமான் ஜெயா மறுசுழற்சி மையம் (திங்கள் முதல் வெள்ளி வரை), மெனாரா எம்.பி.பி.ஜே. திடக்கழிவு மேலாண்மை துறை அலுவலகம் ஆகியவை இதர மூன்று இடங்களாகும் என்று அவர் சொன்னார்.

பொதுமக்கள் தங்கள் வசமுள்ள பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை இவ்விடங்களில் ஒப்படைக்கலாம். ஒரு கிலோ எண்ணைய்க்கு ஒரு வெள்ளி வழங்கப்படும் என்றார் அவர்.

தண்ணீர் அல்லது இதர பொருள்கள் கலந்த எண்ணெய் ஏற்றுக் கொள்ளப்படாது. அதிக எண்ணெயை ஒப்படைப்பவருக்கு பரிசு வழங்கப்படும் என அவர் மேலும் சொன்னார்.

கடந்த 2021 முதல் இவ்வாண்டு மார்ச் மாதம் வரை 1,987 கிலோ பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் சேகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த எண்ணெய், பயோடீசல், சோப்பு, மெழுகுவர்த்தி போன்ற பொருள்கள் தயாரிப்பதற்கு  பயன்படுத்தப்படும்  என்றார் அவர்.


Pengarang :