ECONOMYNATIONALTOURISM

2022 மாட்டா கண்காட்சியில் 50 விழுக்காட்டு சுற்றுலா சலுகை- டூரிசம் சிலாங்கூர் அறிவிப்பு

ஷா ஆலம், ஏப் 8– இவ்வார இறுதியில் கோலாலம்பூர், உலக வாணிக மையத்தில் நடைபெறும் 2022 ஆம் ஆண்டு மாட்டா சுற்றுலா கண்காட்சியில் பங்கேற்கும்படி பொது மக்களுக்கு டூரிசம் சிலாங்கூர் எனப்படும் மாநில சுற்றுலா ஊக்குவிப்பு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

இங்கு அமைக்கப்பட்டுள்ள 12 சுற்றுலா சாவடிகள் 50 விழுக்காடு வரையிலான கழிவை வழங்குவதாக டூரிசம் சிலாங்கூர் வர்த்தக தொடர்புப் பிரிவு நிர்வாகி அகமது நஸ்ரி  தாஷ்ரிக் ரஹ்மாட் கூறினார்.

மிட்ஷூய் அவுட்லெட் பார்க், சிலாங்கூர் ஃப்ருட் வேலி, வேட் வேர்ல்ட் ஷா ஆலம், கமுடா கோவ், மேப்ஸ் செர்டாங் மற்றும் ஸ்கை மிரர் ஆகியவை இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளதாக அவர் சொன்னார்.

“சிலாங்கூரை முதலில் வலம் வருவோம்“ பிரசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த மாட்டா கண்காட்சியில் பங்கேற்றுள்ளோம். இத்திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு கவர்ச்சிகரமான விலையில் மாநில சுற்றுலா திட்டங்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன என்றார் அவர்.

சிலாங்கூர் மாநில மக்கள் மாநிலத்திலுள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா மையங்களுக்கு வருகை புரிவதை ஊக்குவிக்கும் நோக்கில் மாநில அரசு “சிலாங்கூரை முதலில் வலம் வருவோம்“ இயக்கத்தை கடந்த 2020 டிசம்பர் 17 ஆம் தேதி தொடக்கியது.


Pengarang :