ACTIVITIES AND ADSECONOMYMEDIA STATEMENT

நோன்பு பொருநாளை முன்னிட்டு மாபெரும் மலிவு விற்பனைத் திட்டம்- பி.கே.பி.எஸ். ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 10- நோன்பு பெருநாளை முன்னிட்டு வரும் ஏப்ரல் 29 முதல் மே 1 வரை மாபெரும் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனைத் திட்டத்தை பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகம் மேற்கொள்ளவுள்ளது.

மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் கீழ் கோழி, முட்டை, இறைச்சி, மீன், மற்றும் காய்கறிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அக்கழகத்தின் வர்த்தக மற்றும் சந்தைப் பிரிவுக்கான தலைமை நிர்வாகி ரோஸ்னானி  அப்துல் மாலிக் கூறினார்.

வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் தொடர்ச்சியாக மெகா விற்பனைத் திட்டத்தை அமல்செய்ய நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தற்போது சட்டமன்ற நிலையில் மேற்கொள்ளப்படும் மலிவு விற்பனையில் வழங்கப்படும் அதே விலையில் பொருள்களை வாங்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

தற்போது தினசரி 500 கோழிகளும் 500 தட்டு முட்டைகளும் விற்கப்படும் நிலையில் நோன்புப் பெருநாள் விற்பனையின் போது தினசரி தலா 2,000 கோழிகளும் 2,000 தட்டு முட்டைகளும் விற்பனைக்கு வைக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான இடத்தை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். குறைந்த வருமானம் பெறும் பி40 தரப்பினர் அதிகம் கூடும் இடங்களை இலக்காக கொண்டு இத்திட்டத்தை அமல்படுத்த விரும்புகிறோம். வியாபார இடம் அடையாளம் காணப்பட்டவுடன் அது குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் மேலும்  சொன்னார்.

இந்த விற்பனைத் திட்டத்தை பிரபலபடுத்துவதில் உதவும்படி ஊராட்சி மன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் மற்றும் வட்டாரத் தலைவர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.,


Pengarang :