ANTARABANGSAECONOMYTOURISM

நாட்டில் சுற்றுலாத் துறை மீட்சிபெற சிறிது காலம் பிடிக்கும்- துணையமைச்சர் எட்மண்ட் சந்தாரா கூறுகிறார்

கோலாலம்பூர், ஏப் 13– நாட்டில் சுற்றுலாத் துறை மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு சிறிது காலம் பிடிக்கும் என்று சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எட்மண்ட் சந்தாரா கூறினார்.

இம்மாதம் முதல் தேதி நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்ட நிலையில்  வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகளின் வருகை சீரான நிலையை அடைய சிறிது காலம் தேவைப்படும் என்று அவர் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் இன்னும் கடுமையாக உள்ளதை கருத்தில் கொண்டு பலர் சுற்றுலாவை திட்டமிடும் விஷயத்தில் பொறுத்திருந்து பார்க்கும் அணுகுமுறையை கடைபிடிப்பதால் இந்த மந்த நிலை நிலவுகிறது என்று அவர் தெரிவித்தார்.

பொது மக்கள் சீராக செயலாக்க நடைமுறைக்கு (எஸ்.ஒ.பி.) தங்களைப் தயார்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளதால் நிலைமை சீரடைவதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்றார் அவர்.

இது தவிர வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் குறிப்பாக சிங்கப்பூரியர்கள் மலேசியாவுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கான பொருத்தமான நேரத்திற்காக காத்திருக்கின்றனர்.

குறிப்பாக  பள்ளி விடுமுறை அல்லது சிறப்பு விடுமுறை கிடைக்கும் போது அவர்கள் இங்கு சுற்றுலா வருவதற்கான சாத்தியம் உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இங்கு நடைபெற்ற 12 வது மலேசிய கண்காட்சி பரிசளிப்புக்கான வாக்களிப்பு தினத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

மலேசியாவுக்கு வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் வருவதில் தாமதம் ஏற்பட்டதற்கு சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் எல்லைகளை இன்னும் திறக்காமல் இருப்பதும் ஒரு காரணமாகும் என அவர் சொன்னார்.


Pengarang :