MEDIA STATEMENTSUKANKINITOURISM

வான்குடை மிதவை விபத்து- கோல குபு பாரு வான் விளையாட்டு மையம் 3 வாரங்களுக்கு மூடப்படும்

கோலாலம்பூர், ஏப் 25- வான் குடை மிதவை வழி வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த ஆடவர் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து சீரான செயலாக்க நடைமுறைகளை (எஸ்.ஒ.பி.) மறுசீரமைப்பு செய்வதற்கு ஏதுவாக கோல குபு பாரு வான் விளையாட்டு மையம் மூன்று வாரங்களுக்கு மூடப்படுகிறது.

இந்த விபத்து நிகழ்ந்த போது வானிலை நன்றாக இருந்ததோடு அந்த ஆடவர் பயன்படுத்திய சாதனங்களும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டிருந்ததை தொடக்க க் கட்ட விசாரணைகள் காட்டுவதாக மலேசிய வான் விளையாட்டு சம்மேளனத்தின் தலைவர் நுர்ஹக்கிமி முகமது இஸ்மாயில் கூறினார்.

எனினும், எஸ்.ஒ.பி. விதிகளைப் பொறுத்த வரை இன்னும் சில அம்சங்கள் குறிப்பாக அந்த வான் விளையாட்டு மையம் மற்றும் துரித மீட்பு நடவடிக்கை ஆகியவை தரம் உயர்த்தப்பட வேண்டியுள்ளதை அந்த சம்மேளனத்தின் விசாரணைக் குழு கண்டறிந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக எஸ்.ஒ.பி. விதிகளை மறுசீரமைப்பு செய்யும் நோக்கில் அந்த மையத்தை மூன்று வாரங்களுக்கு மூட முடிவு செய்துள்ளோம் என்றார் அவர்.

கோல குபு பாரு அருகிலுள்ள புக்கிட் பத்து பகாட்டில் நேற்று வான் குடை மிதவை வழி வான் சாகசத்தில் ஈடுபட்டிருந்த முகமது ஃபர்ஹாட் காலிட் (வயது 44) கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி உயிரிழந்தார்.

 


Pengarang :