ECONOMYSELANGOR

பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் திட்டங்களை சிலாங்கூர் அரசு தொடரும்

உலு லங்காட், மே 18- எதிர்காலத்தில் பணவீக்கப் பிரச்சனை ஏற்படுவதை தவிர்ப்பதற்காக பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்டும் திட்டங்களை சிலாங்கூர் அரசு தொடர்ந்து அமல்படுத்தி வரும்.

பொருளாதார நடவடிக்கைகளை உயர்த்துவதற்கும் முதலீட்டு மதிப்பை அதிகரிப்பதற்கும் ஏதுவாக ஐரோப்பா, அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய அனைத்துலக வர்த்தகப் பயணத்தை தாம் இம்மாத இறுதி தொடங்கி அடுத்த மாதம் வரை  மேற்கொள்ளவுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

நமது திட்டங்கள் யாவும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக சிப்ஸ் எனப்படும் அனைத்துலக வாணிக உச்சநிலை மாநாடு மற்றும் சாஸ் எனப்படும் சிலாங்கூர் வான் கண்காட்சியை கடந்தாண்டு நடத்தினோம். இவ்வாண்டும் அந்த அந்நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவுள்ளோம் என்றார் அவர்.

நேற்று இங்குள்ள பண்டார் பாரு பாங்கி, லாமான் நியாகா கம்யூனிட்டியில் நடைபெற்ற உலு லங்காட் தொகுதி நிலையிலான சிலாங்கூர் அரசின் நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் கலந்து  கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உற்பத்தி துறையில் நாட்டில் மிக அதிகமாக அதாவது 750 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்ததன் மூலம் சிலாங்கூரில் 14,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக அமிருடின் கடந்த வாரம் கூறியிருந்தார்.

அக்காலக்கட்டத்தில் 247 முதலீட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதாக கூறிய அவர், கோவிட்-19 பெருந் தொற்றுப் பரவலுக்கு மத்தியிலும் மாநிலத்தின் வர்த்தக சூழல் மீது அந்நிய முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதை இது புலப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.


Pengarang :