ALAM SEKITAR & CUACAECONOMYSELANGOR

சுங்கை காயு ஆராவில் வெள்ளத்தை தடுக்க வெ. 64.4 லட்சம் செலவில் வடிகால்கள் சீரமைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- கம்போங் சுங்கை காயு ஆரா பகுதியில் ஆற்றின் தோற்றுவாய்ப் பகுதியில் வடிகால்களைச் சீரமைப்பதற்கும் வெள்ள நீர் சேகரிப்பு குளத்தை நிர்மாணிப்பதற்கும் 64 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி செலவிடப்படுகிறது.

லில்லி மற்றும் ரோஸ் அடுக்குமாடி குடியிருப்பின் எதிரே உள்ள ஒரு ஹெக்டர் பகுதியில் வெள்ள நீர் சேகரிப்பு குளம் அமைப்பது, காயு ஆரா ஆற்றின் நெடுவே ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு கரைகளை தரம் உயர்த்துவது ஆகியப் பணிகளை இத்திட்டம் உள்ளடக்கியுள்ளதாக பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

அப்பகுதியில் ஏற்படக்கூடிய திடீர் வெள்ளப் பிரச்னையை களையும் நோக்கிலான இத்திட்டம் இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டு வரும் 2023 அக்டோபர் 6 ஆம் தேதி முற்றுப் பெறும் என்று அவர் சொன்னார்.

கடுமையான மழை பெய்யும் போதெல்லாம் இப்பகுதியில் ஐந்து அடி வரை வெள்ளம் ஏற்படுகிறது. சுற்றுவட்டார மக்கள் குறிப்பாக கம்போங் செம்பாக்கா வாசிகள் இதனால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர் என்றார் அவர்.

இவ்வட்டார மக்கள் பல ஆண்டுகளாக எதிர்நோக்கி வந்த வெள்ளப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் நோக்கில் இத்திட்டத்தை அமல் செய்த சிலாங்கூர் மாநில அரசு மற்றும் வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று இங்கு நடைபெற்ற இந்த வெள்ளத் தடுப்புத் திட்ட தொடக்க நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர்  செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.


Pengarang :