ECONOMYSELANGOR

சிலாங்கூரில் பயனற்றுப் போகும் நீரின் அளவு கடந்தாண்டு 27.93 விழுக்காடாகப் பதிவு

கோலாலம்பூர், ஜூலை 1– பெருங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம் மாநிலத்தில் பயனற்றுப் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவை கடந்தாண்டில் 27.93 விழுக்காடாக கட்டுப்படுத்தியுள்ளது.

ஸ்பான் எனப்படும் தேசிய நீர் ஆணையம் நிர்ணயித்த 28 விழுக்காட்டு இலக்கை இது தாண்டி விட்டதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹாய்மி கமாருள்ஸமான் கூறினார்.

இதன் வழி தினசரி 19 கோடியே 25 லட்சம் லிட்டர் நீர் வீணாகாமல் தடுக்கப்பட்டதோடு நீர் வளம் திறனுடன் நிர்வக்கிக்கப்படுவதும் உற்பத்தி உயர்ந்த பட்ச அளவுக்கு அதிகரிக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

சிறப்பான வியூகத் திட்டமிடல், நீடித்த திட்டங்களின் அமலாக்கம் மற்றும் பயனற்றுப் போகும் நீரின் அளவைக் குறைக்கும் திட்டங்கள் ஆகியவை இந்த அடைவு நிலைக்கு துணை புரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்பட்டது மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டது ஆகிய காரணங்களால் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மேம்பாடு காண்பதற்கு துணை புரிந்தன என்றார் அவர்.

இங்குள்ள பங்சார் சவுத் சிட்டியில் நேற்று 2021 ஆம் ஆண்டிற்கான சிலாங்கூரின் நீடித்த நீர்  வளம் மீதான அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.

பயனற்றுப் போகும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் அளவு கடந்த 2019 ஆம் ஆண்டில் 29.7 விழுக்காடாகவும் 2020 ஆம்  ஆண்டில் 28.6 விழுக்காடாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :