ECONOMYSELANGOR

நாட்டின் பொருளாதாரத்திற்கு அதிக பங்களிப்பு வழங்கும் மாநிலங்களில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம்

ஷா ஆலம், ஜூலை 1- நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக பங்களிப்பை வழங்கும் மாநிலங்களில் சிலாங்கூர் தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

கடந்தாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிலாங்கூர் மாநிலத்தின் பங்களிப்பு 34,350 கோடி வெள்ளியாக இருந்ததாக மலேசிய புள்ளி விபரத் துறை கூறியது.

கடந்த 2020 ஆம் ஆண்டில் பதிவான 32,710 கோடி வெள்ளியுடன் ஒப்பிடுகையில் இது 1,640 கோடி வெள்ளி அதிகமாகும் என்று அத்துறை வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலாங்கூர் கடந்தாண்டு 5.0 விழுக்காட்டு பொருளாதார வளர்ச்சியுடன் மீட்சி பெற்று வருவதை இது காட்டுகிறது. இதற்கு முந்தைய ஆண்டு மாநிலத்தின் பொருளாதாரம் 5.2 விழுக்காட்டு எதிர்மறையான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது.

நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியில் 72.2  விழுக்காட்டு பங்களிப்பை வழங்கும் கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு, சபா மற்றும் சரவா ஆகிய ஐந்து மாநிலங்களைக் காட்டிலும் சிலாங்கூர் முன்னிலை வகிக்கிறது.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை, உணவு மற்றும் பானங்கள், தங்கும் விடுதி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து, தகவல் மற்றும் தொடர்பு துறைகள் வாயிலாக சிலாங்கூர் மாநிலம் சேவைத் துறையில் 2.2 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இது தவிர, மாநிலத்தில் உற்பத்தித் துறை 13.1 விழுக்காட்டு வளர்ச்சியையும் விவசாயத் துறை 4.9 விழுக்காட்டு வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன.

எனினும், பொது பொறியியல் துணைத் துறைகளில் காணப்பட்ட மந்த நிலை காரணமாக கட்டுமானத் துறை 4.6 விழுக்காடு வீழ்ச்சி கண்டுள்ளது.


Pengarang :