ECONOMYSELANGOR

பொருள் விலையேற்றத்தைத் தடுக்க மத்திய அரசிடம் சரியான செயல் திட்டம் இல்லை- குணராஜ்

ஷா ஆலம், ஜூலை 1- நாட்டில் பொருள் விலையேற்றத்தைத் தடுக்க மத்திய அரசிடம் சரியான செயல் திட்டம் இல்லை என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கூறினார்.

இதன் காரணமாக நாட்டு மக்களுக்கு குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு கடும் விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக அவர்  சொன்னார்.

இந்த பிரச்னையை அரசாங்கம் ஆக்ககரமான முறையில் கையாளாவிட்டால் நாடு கடுமையான பணவீக்கப் பிரச்னையை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் அவர் எச்சரித்தார்.

அமைச்சரும் அமலாக்கத் தரப்பினரும் பொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என்பதோடு மக்களுக்கு சுமை ஏற்படாலிருப்பதையும் உறுதி செய்யவும் வேண்டும் என அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு விரைந்து தீர்வு காணப்படாவிடில் மத்திய அரசுத் தலைவர்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டும் என்று மந்திரி புசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் வலியுறுத்தினார்.

தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை சம்பந்தப்பட்டத் தலைவர்கள் முழுமையாகப் பயன்படுத்தாத காரணத்தால் பொது மக்கள் சிரமத்தை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

ஆகவே, அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம் என்றார் அவர்.


Pengarang :