ECONOMYSELANGOR

இரண்டாம் காலாண்டில் வெ. 300 கோடி முதலீட்டை சிலாங்கூர் பெறும்-டத்தோ தெங் தகவல்

கிள்ளான், ஜூலை 1- இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் சிலாங்கூர் மாநில 300 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் தென் கொரியாவுக்கு மேற்கொண்ட முதலீட்டுப் பயணத்தின் அடிப்படையில் இந்த முதலீட்டு வாய்ப்பு கணிக்கப்படுவதாக முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் கூறினார்.

இந்த உத்தேச முதலீடு சாத்தியமாகும் பட்சத்தில் சிலாங்கூர் மாநிலம் கடந்தாண்டை விடக் கூடுதலாக அதாவது 600 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டை  பதிவு செய்யும் என்று அவர் சொன்னார்.

முதலீட்டு வாய்ப்புகளின் மதிப்பு 300 கோடி வெள்ளிக்கும் அதிகமாக இருக்கும். எனினும் தற்போதைக்கு அது வெறும் வாய்ப்பாக மட்டும் உள்ளது. ஆர்வமுள்ள முதலீட்டாளர்களின் இறுதி முடிவுக்காக காத்திருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.

நடப்பு நிலவரங்கள் எங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் உள்ளன. முதல் காலாண்டில் நாங்கள் 300 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளைப் பெற்று விட்டோம் என்றார் அவர்.

இன்று இங்கு நடைபெற்ற நிகழ்வொன்றில் 21 சூராவ்களுக்கு குர்பான் கால்நடைகளுக்கான கூப்பன்களை வழங்கியப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

இவ்வாண்டி 2,800 கோடி வெள்ளி முதலீட்டு வாய்ப்புகளை பெறும் இலக்கை அடைய முடியும் என மாநில அரசு நம்புவதாகவும் டத்தோ தெங் சொன்னார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக கடந்தாண்டு 750 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை மட்டுமே பெற முடிந்ததாக கூறிய அவர், அதற்கு முந்தைய ஆண்டுகளில் பதிவான முதலீடுகளின் மதிப்பு அதைவிட அதிகமாக இருந்தது என்றார்.


Pengarang :