SELANGORSUKANKINI

திரங்கானுவிடம் தோல்வி- எஃப்.ஏ. கிண்ணப் போட்டியில் இறுதி சுற்றுக்கு நுழையும் வாய்ப்பை நழுவ விட்டது சிலாங்கூர்

கோல நெருஸ், ஆக 7- இங்கு நேற்று நடைபெற்ற எஃப்.ஏ. கிண்ணக் கால்பந்து போட்டியின் அரையிறுதிச் சுற்றில் திரங்கானுவிடம் தோல்வி கண்டதன் வழி இறுதியாட்டத்திற்கு செல்லும் வாய்ப்பை சிலாங்கூர் எஃப்.சி. குழு நழுவ விட்டது.

சுல்தான் மிஸான் ஜைனால் அபிடின் அரங்கில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் இரு குழுக்களும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததைத் தொடர்ந்து பெனால்டி வழி வெற்றிக் குழுவை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது.

பெனால்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் குழுவை வீழ்த்திய திரங்கானு எஃப்.சி. குழு இறுதியாட்டத்தில் திராங்கனு டாருள் தாக்ஸிம் குழுவை சந்திக்கவிருக்கிறது.

ஆட்டத்தின் தொடக்க நிமிடங்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சிலாங்கூர் அணி ஏழாவது நிமிடத்தில் எதிரணியின் கோல் முனையில் அபாயகரத் தாக்குதலை நடத்தியது. நோர் ஹக்கிம் ஹசான் அடித்த பந்தை கோல் காவலர் ரஹாடியாஸ்லி  ரஹாலிம்  வெற்றிகரமாகத் தடுத்து விட்டார்.

இரு குழுக்களும் தொடர்ந்து இடைவிடாத தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தன. ஆட்டத்தின் 23ஆவது நிமிடத்தில் நோர் ஹக்கிம் முதல் கோலை புகுத்தி சிலாங்கூர் வெற்றி பாதைக்கு கொண்டு வந்தார்.

கோல் எண்ணிக்கையை சமநிலைப்படுத்த தொடர்ந்து முயன்று வந்த திரங்கானு அணிக்கு ஆட்டத்தின் 48 வது நிமிடத்தில் அற்புதமான வாய்ப்பு கிட்டியது. பைசால் ஹலிம் மின்னல் வேகத்தில் அடித்த பந்து சிலாங்கூர் தற்காப்பு அரணைத் தகர்த்து கோல் கம்பத்தில் புகுந்தது.

ஆட்டத்தின் இரண்டாம் பாதி முடிவுக்கு வந்த நிலையிலும் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததைத் தொடர்ந்து கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

இந்த போதிலும் கோல் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து பெனால்டி வழி வெற்றிக் குழுவை தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டது. இதில் திரங்கானு அணி கோல் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வெற்றியை உறுதி  செய்தது


Pengarang :