ECONOMYMEDIA STATEMENT

பாதுகாவலர் தாக்கப்பட்டதில் குண்டர் கும்பல் சம்பந்தப்படவில்லை- போலீஸ் விளக்கம்

அலோர்ஸ்டார், ஆக 8- சுங்கை பட்டாணியில் கடந்த வியாழக்கிழமை பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு பாராங் கத்தியால் வெட்டப்பட்ட சம்பவத்தில் குண்டர் கும்பலுக்கு தொடர்பில்லை என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வான் ஹசான் வான் அகமது கூறினார்.

அந்த தாக்குதலில் உயிரிழந்த இஸ்மாயில் அகமது (வயது 58) என்ற பாதுகாவலர் சந்தேக நபர்களைக் கண்டித்த காரணத்தால் எழுந்த கருத்து வேறுபாடே இச்சம்பவத்திற்கு காரணம் என்று அவர் சொன்னார்.

சுங்கை பட்டாணி, புக்கிட் பன்யான் அருகே உள்ள செய்ரா 4 வீடமைப்புத் திட்ட பகுதியில் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டியதற்காக சந்தேகப் பேர்வழிகளில் ஒருவரை அப்பகுதியில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வரும் இஸ்மாயில் இதற்கு முன்னர் கண்டித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடுமையாக தாக்கப்பட்டதோடு பாராங் கத்தி வெட்டுக்கும் ஆளான இஸ்மாயில் சுங்கை பட்டாணி சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் நேற்று மாலை 5.30 மணியளவில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் போலீசார் இரு சந்தேக நபர்களை கைது செய்தனர். அவர்களில் ஒருவன் மீது குற்றச்செயல் மற்றும் போதைப் பொருள் தொடர்பில் பல குற்றப்பதிவுகள்  உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில் இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 326வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேளையில் தாக்குதலுக்கு உள்ளான நபர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இவ்வழக்கு குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் மேலும் ஒரு சந்தேக நபரை தேடி வருகின்றனர்.


Pengarang :