ECONOMYNATIONAL

மின் தடை விசாரணை மீதான கூட்டத்தை தொடக்கியது தெனாகா நேஷனல் நிறுவனம்

புத்ரா ஜெயா, ஆக 8- தீபகற்ப மலேசியாவில் கடந்த மாதம் 27 ஆம் தேதி ஏற்பட்ட மின் தடை தொடர்பான விசாரணைக்காக  தொடர் கூட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்களை தெனாகா நேஷனல் (டி.என்.பி.) நிறுவனம் நடத்தியுள்ளது.

சுயேச்சை அமைப்பான மின்சக்தி ஆணையம், எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சின் குழு ஆகியவற்றோடு தெனாகா நேஷனல் நிறுவனத் தரப்பினரையும் இந்த சந்திப்புக் கூட்டங்கள் உள்ளடக்கியிருந்ததாக டி.என்.பி. நிறுவனத்தின் விநியோக ஒருங்கமைப்புத் தலைவர் வான் நஸ்மி வான் மாமுட் கூறினார்.

அந்த மின் தடை தொடர்பான உண்மைகள் மற்றும் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கு ஏதுவாக நாங்கள் விசாரணைக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

இன்று இங்கு தீபகற்ப மலேசிய கிராம தெரு விளக்கு  திட்ட நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுமார் 10 லட்சம் பயனீட்டாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திய மின் தடை தொடர்பான விசாரணை ஒரு மாத காலத்தில் முற்றுப் பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக எரிசக்தி மற்றும் இயற்கை வள அமைச்சர் டத்தோ ஸ்ரீ தக்கியுடின் ஹசான் கடந்த ஜூலை 31 ஆம் தேதி கூறியிருந்தார்.

மின் தடைக்கான காரணத்தை இந்த விசாரணைக் குழு கண்டறியும் அதேவேளையில் டி.என்.பி. நிறுவனத்தின் சேவை நிலை உத்தரவாத திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட பயனீட்டாளர்கள் கட்டணக் கழிவை பெறுவதற்குரிய வாய்ப்பு உள்ளதா என்பதையும் அது ஆராயும் என அவர் தெரிவித்தார்.


Pengarang :