ECONOMYNATIONAL

பெருந்தொற்று தொடங்கியது முதல் 15,500 கோடி வெள்ளியை இ.பி.எஃப். உறுப்பினர்கள் மீட்டுள்ளனர்

கோலாலம்பூர், ஆக 8- கோவிட்19 தொடர்புடைய நான்கு பண மீட்புத் திட்டங்கள் வாயிலாக 15,500 கோடி வெள்ளியை ஊழியர் சேம நிதி வாரிய உறுப்பினர்கள் (இ.பி.எஃப்.) மீட்டுள்ளனர்.

அந்த நான்கு திட்டங்கள் வாயிலாக உறுப்பினர்கள் மீட்டத் தொகையின் மதிப்பு 14,500 கோடி வெள்ளியாக இருந்த வேளையில் ஊழியர்களின் சட்டப்பூர்வ பங்களிப்பு விகித குறைப்புத் திட்டத்தை சுமார் 1,000 கோடி வெள்ளி உள்ளடக்கியிருந்ததாக துணை நிதியமைச்சர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா கூறினார்.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ஐ-லெஸ்தாரி, ஐ-சினார், ஐ-சித்ரா மற்றும் சிறப்பு நிதி மீட்புத் ஆகிய நான்கு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டது முதல் ஊழியர் சேமநிதி வாரியத்தில் உறுப்பினர்களின் சேமிப்பு மிகவும் குறைந்துள்ளதோடு கவலையளிக்கும் வகையிலும் உள்ளதாக அவர் சொன்னார்.

மேலவையில் இன்று பத்தாயிரம் வெள்ளிக்கும் குறைவான சேமிப்பை வைத்திருக்கும் உறுப்பினர்களை காப்பாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து செனட்டர் ரசாலி இட்ரிஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாண்டு ஜூன் 30 ஆம் தேதி வரை 1 கோடியே 27 லட்சத்து 80 ஆயிரம் இ.பி.எஃப். சந்தாதாரர்களில் 52 விழுக்காட்டினர் அல்லது 66 லட்சத்து 20 ஆயிரம் பேர் 10,000 வெள்ளிக்கும் குறைவான தொகையை சேமிப்பில் வைத்துள்ளதாக முகமது சஹார் குறிப்பிட்டார்.

அவர்களில் 75 விழுக்காட்டினர் அல்லது 49 லட்சத்து 90 பேர் பூமிபுத்ராக்கள் என்றும் அவர் கூறினார்.

இது தவிர, 55 வயதுக்கும் கீழ்ப்பட்ட உறுப்பினர்களில் 32 லட்சம் பேர் 1,000 வெள்ளிக்கும் குறைவான வெள்ளியைக் சேமிப்பாக கொண்டுள்ளனர். அவர்களில் அவர்களில் 81 விழுக்காட்டினர் அல்லது 25 லட்சத்து 80 ஆயிரம் பேர் பூமிபுத்ராக்கள் என்று அவர் விளக்கினார்.


Pengarang :