ECONOMYNATIONAL

கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா செனட்டர்களைக் கட்டுப்படுத்தாது – பிரதமர் தகவல்

கோலாலம்பூர், ஆக 9- நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவுவதை தடுக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (எண்.3) செனட்டர்கள் அல்லது மேலவை உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தாது.

சிறப்புத் தேர்வுக் குழு பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டப் பின்னர் இவ்விவகாரம் தொடர்பில் இணக்கம் காணப்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

இந்த கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதாவை இரண்டாம் வாசிப்புக்காக இன்று மேலவையில் தாக்கல் செய்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மேலவை இரு பிரிவு உறுப்பினர்களைக் கொண்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டது. மாட்சிமை தங்கிய பேரரசரால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் சம்பந்தப்பட்ட ஆளும் அரசியல் கட்சிகளின் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் மாநில அரசினால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் என இரு பிரிவினர் உள்ளன என்று அவர் சொன்னார்.

ஆகவே, கட்சித் தாவலைத் தடுக்க வகை செய்யும் சட்ட மசோதா மேலவை உறுப்பினர்களுக்கு பொருந்தாது என்று அவர் தெளிவுபடுத்தினார்.

மேலவை உறுப்பினர்களை சம்பந்தப்படுத்திய கட்சித் தாவல் தடைச் சட்டம் அமல்படுத்தப்படுவதற்கு முன்னர் சந்திப்பு நிகழ்வுகள் வாயிலாக இது குறித்த விளக்கங்கள் அனைத்து செனட்டர்கள் மற்றும் அதில் தொடர்புடையவர்களுக்கு வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த மசோதாவை தாக்கல் செய்வதன் வாயிலாக அரசியல் நிலைத்தன்மையை காக்கப்படுவதையும் நாடு தொடர்ந்து அரசியல் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதை தவிர்க்கவும் அரசாங்கம் விரும்புவதாக பிரதமர் சொன்னார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் வலுவான காரணங்கள் இன்றி கட்சித் தாவுவதைத் தடுக்கும் ஆற்றலை இந்த கட்சித் தாவல் தடைச் சட்ட மசோதா கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.


Pengarang :