ECONOMYPENDIDIKAN

யு.பி.எஸ்.ஆர். மற்றும் பிடி3 தேர்வுகளை அகற்றும் முடிவில் கல்வியமைச்சு உறுதி

புத்ரா ஜெயா, ஆக 9- யு.பி.எஸ்.ஆர். எனப்படும் ஆரம்பப் பள்ளி மதிப்பீட்டு தேர்வு மற்றும் பிடி3 எனப்படும் மூன்றாம் படிவ மதிப்பீட்டுத் தேர்வு முறையை மீண்டும் அமல்படுத்துவதில்லை என்ற முடிவில் கல்வியமைச்சு உறுதியாக உள்ளது.

அவ்விரு தேர்வுகளும் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை பெற்றோர்களிடமிருந்து வந்த போதிலும் இவ்விவகாரத்தில் அமைச்சின் முடிவில் மாற்றமில்லை என்று இரண்டாம் துணைக்  கல்வியமைச்சர் டத்தோ முகமது அலாமின் கூறினார்.

கல்வியில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் ஆற்றல் பெற்ற மனித மூலதனத்தை உருவாக்குவது கல்வியமைச்சின் நோக்கமாக உள்ளதால் யு.பி.எஸ்.ஆர். மற்றும் பிடி3 தேர்வுகள் அகற்றப்படுகின்றன என்று அவர் சொன்னார்.

இவ்விவகாரம் தொடர்பில் நாம் பல முறை விளக்கமளித்து விட்டோம். கல்வியில் மட்டுமின்றி பல துறைகளில் ஆற்றல் பெற்றவர்களை நாம் உருவாக்க விரும்புகிறோம் இவ்விவகாரத்தில் கல்வியை மட்டும் அடிப்படையாக கொண்ட பிரத்தியேக அணுமுறையை அல்லாமல் விரிவான அணுகுமுறையை கையாள விரும்புகிறோம் என்றார் அவர்.

நாடு மேம்பாட்டை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. பல்வகைத் திறன்கள் கொண்ட மனித மூலதனத்தை உருவாக்க நாம் விரும்புகிறோம். இதுவே எங்களின் பிரதான நோக்கமாகும். எங்களை நம்புங்கள், சர்வ வல்லமை கொண்ட நாட்டை உருவாக்குவதற்கு நாங்கள் நிச்சயம் உதவுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பள்ளிகளில் மதிப்பீட்டு முறைக்கான ஒரே அணுகுமுறையாக பி.பி.டி. எனப்படும் வகுப்பறை மதிப்பீட்டின் அமலாக்கத்திற்கு கல்வியமைச்சு இன்னும் தயாராகாத காரணத்தால் யு.பி.எஸ்.ஆர். மற்றும் பிடி3 தேர்வுகள் மறுபடியும் அமல்படுத்தப்பட வேண்டும் என்று பல பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கருத்துரைத்த போது துணையமைச்சர் இவ்வாறு கூறினார்.


Pengarang :