ECONOMYPENDIDIKANSELANGOR

பெட்டாலிங் ஜெயா புத்தகக் கண்காட்சிக்கு சுமார் 2,000 பேர் வருகை

ஷா ஆலம், செப் 6- இங்குள்ள சிவிக் மண்டபத்தில் இம்மாதம் 3 ஆம் தேதி தொடங்கிய  பெட்டாலிங் ஜெயா புத்தக கண்காட்சியில் நேற்று வரை சுமார் இரண்டாயிரம் பேர் வரை கலந்து கொண்டனர்.

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஈராண்டு காலமாக தடைபட்டிருந்த இந்த புத்தக க் கண்காட்சிக்கு இம்முறை பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்துள்ளதாக  பெட்டாலிங் ஜெயா சமூக  நூலக கருவளப் பிரிவின் துணை உதவி இயக்குநர் ஜைனால் அபிடின் ரஹிம் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் ஏற்பாட்டிலான இந்த கண்காட்சியில் முதல் நாள் 1,000 பேர் கலந்து கொண்ட வேளையில் இரண்டாம் நாள் 800 பேர் பங்கேற்றனர். முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இம்முறை இந்த கண்காட்சிக்கு விசாலமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார் அவர்.

மிக பிருமாண்டமான முறையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படாததால் வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் 20,000 பேர் வரை பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 60 வெளியீட்டாளர்கள் காட்சிக்கு வைத்துள்ள பல்வேறு வகையான புத்தகங்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை இந்த கண்காட்சிக்கு வருவோர் பெற முடியும் என்றும் அவர் சொன்னார்.

மலேசிய புத்தக பதிப்பகத்தாரர் சங்கத்தின் ஆதரவுடன் நடத்தப்படும் இந்த கண்காட்சி தினமும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும்.


Pengarang :