ECONOMYMEDIA STATEMENTPENDIDIKAN

அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டு – பள்ளி தலைமையாசிரியை கைது

அலோர் ஸ்டார், செப் 13- அதிகாரத் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் பேரில் பிரத்தியேகப் பள்ளி ஒன்றின் தலைமையாசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2019 முதல் கடந்தாண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தன் இரு மகன்களுக்குச் சொந்தமான இரு நிறுவனங்களிடமிருந்து பள்ளிக்குத் தேவையான பொருள்களை அந்த தலைமையாசிரியை வாங்கியதாக கூறப்படுகிறது.

வாக்குமூலம் அளிப்பதற்காக நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சுங்கை பட்டாணியிலுள்ள ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு வந்த போது 58 வயதான அந்த தலைமையாசிரியை கைது செய்யப்பட்டார்.

தனது இரு மகன்கள் பெயரில் பதிவு செய்யப்பட்ட இரு நிறுவனங்களிடமிருந்து 22,646 வெள்ளி மதிப்பிலான பொருள்களை அந்த தலைமையாசிரியை  தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.

தனது வயதான கணவரை பராமரிக்கும் பொறுப்பில் உள்ளதால் அந்த பெண்மணி 10,000 வெள்ளி உத்தரவாதத்துடன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே, அந்த தலைமையாசிரியை கைது செய்யப்பட்டதை உறுதிப்படுத்திய கெடா மாநில எம்.ஏ.சி.சி. இயக்குநர் டத்தோ ஷஹாரோம் நிஸாம் அப்துல் மானாப், 2009 ஆம்
ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரிக்கப்படுவதாகக் கூறினார்.


Pengarang :